போராட்டத்தில் சங்க கொடி பயன்படுத்தும் விவகாரம்: போலீசாருடன் சத்துணவு ஊழியர்கள் வாக்குவாதம்

போராட்டத்தில் சங்க கொடி பயன்படுத்தும் விவகாரத்தில் போலீசாருடன் சத்துணவு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-08-30 17:01 GMT


விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் யார் சங்கத்தின் கொடி, பெயரை பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி ஒரு தரப்பு சங்கத்தினர் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நகராட்சி மைதானத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சங்கம் தொடர்பாக பிரச்சினை உள்ளதால் போலீசார், அப்போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் சத்துணவு ஊழியர்கள் கண்டன கோஷம் எழுப்பிய பின்பு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை மற்றொரு தரப்பை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் அதே இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்கத்தின் கொடி, பேனர் பயன்படுத்தப்பட்டது. இதையறிந்த மாற்று தரப்பினர், மாவட்ட பெருந்திட்ட வளாகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். உடனே அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களின் போராட்டத்தின்போது சங்க கொடி, பேனர் பயன்படுத்தக்கூடாது என தடுத்த நீங்கள், எதிர் தரப்பிற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீங்கள் வேண்டுமானால் வேறு ஒரு நாள் சங்க கொடியுடன் போராட்டம் நடத்திக்கொள்ளுங்கள் என போலீசார் தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்