கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்துஉணவு பாதுகாப்பு அதிகாரிகள்-போலீசார் அதிரடி சோதனை

கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்துஉணவு பாதுகாப்பு அதிகாரிகள்-போலீசார் அதிரடி சோதனை

Update: 2022-06-23 12:52 GMT

அனுப்பர்பாளையம்

திருப்பூரில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து அதிரடியாக சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்-போலீசார் காலாவதியான பொருட்களை கீழே கொட்டி அழித்தனர்.

திருப்பூர் மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே 100 மீட்டர் தொலைவிற்குள் உள்ள கடைகளில் சிகரெட், பீடி உள்ளிட்ட புகைப் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகரில் குட்கா என்று சொல்லப்படும் புகையிலை பொருட்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல் பள்ளி, கல்லுரிகள் அருகே உள்ள கடைகளிலும் புகைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் வடக்கு, 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் திருப்பூர் கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், அனுப்பர்பாளையம் சரக உதவி கமிஷனர் நல்லசிவம், உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல், மருந்து ஆய்வாளர் மகாலட்சுமி, அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது பல கடைகளில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதேபோல் பல கடைகளில் காலாவதியான திண்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. ஒருசில கடைகளில் அனுமதி இல்லாமல் மாத்திரைகள் விற்பனை செய்ததும், விற்பனை செய்யும் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, தயாரிப்பாளர்கள் பெயர், முகவரி இல்லாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து புகை பொருட்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், காலாவதியான பொருட்களை கீழே கொட்டி அழித்தனர். மேலும் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதமும் விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லுரிகள் அருகே புகைப்பொருட்கள் விற்பனையும், திருப்பூர் மாநகர் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் எச்சரித்தார். இதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் கண்டிப்பாக தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியும், தயாரிப்பாளர்களின் முகவரியும் இருக்க வேண்டும் என்றும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கக் கூடாது என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்