காரிமங்கலம்:
காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு விழா, உணவு திருவிழா நடந்தது.
கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்து பேசினார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறுதானியங்கள் குறித்தும், அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சுகாதாரமற்ற உணவுகளால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்கினார். இதில் பாலக்கோடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, கிராமிய மசாலா நிறுவன மேலாளர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 150 வகையான சிறுதானிய உணவு வகைகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சிறுதானிய உணவினை சிறப்பாக தயாரித்து முதல் பரிசு வென்ற புவனேஸ்வரி, 2-வது பரிசு வென்ற ஜனனி, 3-வது பரிசு வென்ற அபினயா ஸ்ரீ மற்றும் சிறப்பு பரிசுகளை வென்ற சாரு ஸ்ரீ, சவுமியா, சவுந்தர்யா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
முடிவில் கவுரவ விரிவுரையாளர் கோமதி நன்றி கூறினார்.