தக்காளி, சின்னவெங்காயத்தை தொடர்ந்து இஞ்சி விலையும் அதிகரிப்பு

தக்காளி, சின்னவெங்காயத்தை தொடர்ந்து இஞ்சி விலையும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்

Update: 2023-07-09 21:38 GMT

தஞ்சாவூர்:

தக்காளி, சின்னவெங்காயத்தை தொடர்ந்து இஞ்சி விலையும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.

இஞ்சி

இஞ்சி இல்லாத அசைவ உணவுகளே இருக்காது. அந்த அளவுக்கு சைவம், அசைவ உணவுகள் தயாரிப்பில் இஞ்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதேபோல, தேநீர் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் சமோசா, பப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் தயாரிப்பிலும் இஞ்சி முக்கிய இடம் பெறுகிறது. மேலும், சில கடைகளில் இஞ்சி டீ தயாரிப்பின்போதும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

இதுதவிர, கரும்புச் சாறு விற்பனை செய்யும் கடைகளில் எந்திரத்தில் கரும்பை அரைத்து சாறு பிழியும்போது கரும்புடன் எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்தே அரைத்து சாறெடுக்கின்றனர்.

கரும்புச் சாறின் சுவையை மேலும் கூட்டும் வகையில் இவ்வாறு இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் அன்றாட உணவு மற்றும் பலகாரங்கள் தயாரிப்பின்போதும், உணவு சார்ந்த வர்த்தக மையங்களிலும் அதிக அளவில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

விலை அதிகரிப்பு

செரிமான பிரச்சினைக்கு முக்கிய தீர்வாக இந்த இஞ்சி உள்ளது.

இஞ்சி விலை தற்போது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அனைத்து காய்கறி விலைகளும் உயர்ந்துள்ள நிலையில் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக இஞ்சி வரத்து குறைந்து விட்டது.

அதனால் விலையும் அதிகரித்து உள்ளது. வரத்து குறைவு காரணமாக தஞ்சையில் நேற்று இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்துடன் இருப்பதால் சில்லறை வியாபாரிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு காரணமாக, காய்கறிகள் வாங்கும் அளவை இல்லத்தரசிகள் குறைத்துக் கொண்டனர். காய்கறி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்பெல்லாம் காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் காய்கறிகளுடன் ரூ.10-க்கு இஞ்சியை கேட்டு வாங்கிச் சென்றனர். தற்போது ரூ.10-க்கு இஞ்சி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இஞ்சி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்துக்கு இஞ்சி விலை உச்சத்தில் தான் இருக்கும். அதன் பிறகு மீண்டும் இஞ்சி அறுவடை தொடங்கி, அதன் வரத்து அதிகமாகும்போது விலை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஏறுமுகம்

தஞ்சை மாவட்டத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது. தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையானது. இந்த விலை இன்று மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சை பர்மாகாலனி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனையானது. தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தான் உயர்ந்து காணப்பட்டது என்றால் தற்போது அந்த வரிசையில் பீன்ஸ், பச்சை மிளகாய் ஆகியவையும் சேர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.110-க்கும், பச்சை மிளகாய் ரூ.100 முதல் 120 வரையும் விற்கப்பட்டது. பெரிய வெங்காயம் ரூ.30-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், கேரட் ரூ.70-க்கும், சவ்சவ் ரூ.35-க்கும், உருளைக்கிழங்கு ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சை உழவர் சந்தையில் தக்காளி ரூ.104-க்கும், பீன்ஸ் ரூ.110-க்கும், பச்சை மிளகாய் ரூ.76-க்கும், இஞ்சி ரூ.280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்