இளம்பெண்ணை தொடர்ந்து கணவரும் பரிதாப சாவு

நாகர்கோவிலில் கடன் தொல்லையால் விஷம் குடித்த சம்பவத்தில் இளம்பெண்ணை தொடர்ந்து கணவரும் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-22 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கடன் தொல்லையால் விஷம் குடித்த சம்பவத்தில் இளம்பெண்ணை தொடர்ந்து கணவரும் பரிதாபமாக இறந்தார்.

தொழிலில் நஷ்டம்

நாகர்கோவில் பட்டகசாலியன்விளை ஆயுதப்படை முகாம் அருகில் உள்ள பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரபீன் (வயது 30). மர வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ரூபா (28). இவர் பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு 2½ வயதில் ரக்சனா என்ற மகளும், 1½ வயதில் ரக்சின் என்ற மகனும் உள்ளனர்.

பிரபீன் முதலில் பன்றி பண்ணை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த தொழிலை கைவிட்டு மர வியாபார தொழிலுக்கு மாறினார்.

மேலும் பிரபீனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்தது. இதற்கிடையே மர வியாபார தொழிலும் சரியாக நடைபெறாமல் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் பிரபீன் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டில் அவருக்கு பணம் கிடைக்கும் என்று நம்பி இருந்தார். ஆனால் லாட்டரி சீட்டிலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கணவனும் சாவு

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரபீனும் அவருடைய மனைவியும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு தென்னை மரத்துக்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குளிர்பானத்தில் கலந்து குடித்தனர். அத்துடன் ஒரு பாட்டிலில் அடைத்து குழந்தைகளுக்கும் கொடுத்தனர். ஆனால் கசப்புத்தன்மை அதிகம் இருந்ததால் குழந்தைகள் துப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் ரூபா மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ரூபாவையும், பிரபீனையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அத்துடன் குழந்தைகளும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் அன்று இரவே அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ரூபா நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். பிரபீனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் பிரபீனும் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

உறவினர்களிடம் ஒப்படைப்பு

இதையடுத்து பிரபீன், ரூபா ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் பிரவீன் விஷம் குடிப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் இந்த முடிவை எடுத்துக் கொள்வதாகவும் தனக்கு சொந்தமானவற்றை விற்று கடனை அடைத்து விடுங்கள் என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட பிரவீன், ரூபாவின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்