8 பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிப்பு

விராலிமலை முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தில் பங்கேற்ற 8 பெண்களிடம் தங்க சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-06-12 18:41 GMT

விராலிமலை:

முருகன் கோவில்

விராலிமலை முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் ஏராளமானோர் தேரோட்டத்தை காண வந்திருந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டத்தை காண வந்த ஆர்வத்திலும் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர், மோர், பானகம் கொடுக்கும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை வாங்கும் ஆர்வத்தில் இருந்த பெண்களிடம் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

8 பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிப்பு

தங்களது தங்க சங்கிலிகளை மர்மநபர்கள் பறித்து சென்றது சிறிது நேரத்திற்கு பிறகே அறிந்த பெண்கள் செய்வதறியாது தவித்தனர். அதன் பிறகு விராலிமலை போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்து விராலிமலை போலீஸ்நிலையத்தில் விராலிமலை மணமேட்டுப்பட்டியை சேர்ந்த மருதமுத்து மனைவி மலைக்கொழுந்து (வயது 48) என்பவரின் 2 பவுன் சங்கிலி, விராலிமலை வடுகப்பட்டிச்சேர்ந்த சுப்பிரமணி மனைவி சரஸ்வதி (50) என்பவரின் 3 பவுன் சங்கிலி, விராலிமலை இ.பி. ஆபீஸ் எதிர்புறத்தை சேர்ந்த பொன்னன் மனைவி பெரியக்காள் (55) என்பவரின் 2½ பவுன் சங்கிலி, கல்குடி கண்ணன் மனைவி பானுமதி, விராலூர் ராமன் மனைவி காளியம்மாள், மலைக்குடிபட்டி ஆறுமுகம் மனைவி தனம் உள்ளிட்ட 8 பெண்களிடம் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்