விலை குறையும் போது வீணாகும் பூக்கள்: பூசாரிபட்டியில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படுமா?-விவசாயிகள் எதிர்பார்ப்பு

விலை குறையும் போது வீணாகும் பூக்களை கொண்டு பூசாரிபட்டியில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-11-18 23:08 GMT

ஓமலூர்:

பூக்கள் சாகுபடி

ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் பூசாரிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, மூக்கனூர், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, தும்பிபாடி, சர்க்கரைசெட்டிபட்டி, பொட்டியபுரம், கொங்குபட்டி, காருவள்ளி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாமந்தி, சாந்தினி, செண்டுமல்லி, பூர்ணிமா மஞ்சள், பூர்ணிமா வெள்ளை, செண்டு மஞ்சள், செண்டு வெள்ளை, நாட்டு சாமந்தி, சாமந்தி கலர் பூக்கள், வயலட் உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பூக்கள் விற்பனைக்காக சேலம் தேர்முட்டி பூ மார்க்கெட், பூசாரிப்பட்டி பூ மார்க்கெட், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதிலும் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உள்ள பூக்களை பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டிற்கு எடுத்து செல்வர்.

வீணாகும் பூக்கள்

இந்த நிலையில் கடந்த மாதத்திற்கு முன்பு வரை பூக்களின் விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது. பூக்களின் விலை படிப்படியாக குறைந்து பூக்களை கேட்பதற்கு கூட வியாபாரிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை போனது. அதையும் வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் விரக்தி அடைந்த விவசாயிகள் பூக்களை சாலையோரம் கொட்டி செல்லும் காட்சியை காண முடிந்தது.

சென்ட் தொழிற்சாலை

ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடப்பதால் பூசாரிப்பட்டியை தலைமையிடமாக கொண்டு சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஒவ்வொரு தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வருவோர், நாங்கள் வெற்றி பெற்றால் இங்கு சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவதும், அதன்பிறகு அந்த வாக்குறுதி காணாமல் போவதும் வழக்கமாகி விட்டது.

இதுபற்றி விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

சர்க்கரை செட்டிபட்டி விவசாயி பெரியண்ணன்:- இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் பூக்கள் ஒரே நேரத்தில் அறுவடைக்கு வந்துவிட்டது. விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒருவர் பூக்கள் சாகுபடி செய்தால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் பூக்களையே சாகுபடி செய்கின்றனர். பூக்கள் சாகுபடியில் சராசரி விலை கிடைக்க அரசு இந்தப் பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ஏக்கருக்கு லட்சம் ரூபாய் செலவு

மாட்டுக்காரன்புதூர் விவசாயி ராமச்சந்திரன்:- காடையாம்பட்டி வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் பூசாரிப்பட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு வியாபாரிகளிடம் விற்கப்படுகிறது. தற்போது பூக்கள் விலை குறைந்து கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி நாற்று 2 ரூபாய் என்ற விலையில் வாங்கி அதற்கு நடவு செய்து உரம் போட்டு பறிக்க சம்பளம் கொடுத்து ஏக்கருக்கு லட்சம் வரை செலவு செய்த பிறகுதான் அறுவடை செய்ய முடிகிறது.

அந்த அளவு செலவு செய்த பிறகு பூக்களை அறுவடை செய்யும் போது கிலோ ரூ.10-க்கு தான் விற்பனை செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. பூக்களுக்கு சராசரி விலை கிடைக்க இந்த பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

நீண்ட நாள் கோரிக்கை

தாராபுரம் விவசாயி குருநாதன்:- கடந்த ஆயுத பூஜையின் போது பூக்களின் விலை 100 ரூபாய் தாண்டி விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக விலை குறைந்து தற்போது கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை மட்டுமே அனைத்து ரக சாமந்தி பூக்களும் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் ஏக்கருக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.

இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போதும் பூசாரிப்பட்டியை மையமாகக் கொண்டு சென்ட் தொழிற்சாலை அமைத்து கொடுக்கப்படும் என அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சென்ட் தொழிற்சாலை இந்த பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்