பூக்கள் விலை உயர்வு
வரத்து குறைவாலும், சீசன் இல்லாததாலும் கடலூரில் பூக்கள் விலை உயர தொடங்கியுள்ளது. ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கடலூர் மாநகரம் மட்டுமின்றி, சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி வந்து பூக்களை மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் வாங்கி செல்கின்றனர்.
இதற்காக கடலூர் நாணமேடு, உச்சிமேடு, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் பறித்து, தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இறக்குமதி செய்யப்படுகிறது.
குண்டுமல்லி ரூ.400
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையாலும், சில பூவுக்கான சீசன் முடிய உள்ளதாலும் தற்போது பூக்கள் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர தொடங்கியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.300-க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.100 அதிகரித்து ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ரூ.200-க்கு விற்கப்பட்ட முல்லை பூ நேற்று ரூ.260-க்கும், ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி ரூ.280-க்கும் விற்பனையானது.
மேலும் கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.200, அரளி ரூ.120, ரோஜா ரூ.60, சம்பங்கி ரூ.50 என விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மொத்தமாக வாங்க முடியாத பொதுமக்கள் சில்லரை விலைக்கு போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றதை காண முடிந்தது.