ஆர்.எஸ்.புரம்,
வரத்து அதிகரிப்பு காரணமாக கோவையில் பூக்கள் விலை குறைந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.400-க்கு விற்பனையானது.
பூக்களின் விலை குறைந்தது
கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும்.
இங்கு பூக்களின் வரத்தை பொறுத்து காலை மற்றும் மாலை என்று இரு வேளையில் பூக்களின் விலை நிா்ணயம் செய்யப்படும். இந்தநிலையில் கடந்த வாரம் ஓணம் பண்டிகையையொட்டி கோவை பூமார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு பூக்கள் அனுப்பிவைக்கப்பட்டது. இதனால் பூக்களின் தேவை அதிகளவு இருந்தது. இதன்காரணமாக பூமார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. அதன்படி கடந்த வாரம் ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது.
மல்லிகைப்பூ ரூ.400
தற்போது கோவை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. அதன்படி நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600 முதல் ரூ.400 வரை விற்பனையானது. மற்ற பூக்களின் விலை கிலோவில் வருமாறு (அடைப்புக்குறிக்குள் கடந்த வாரம் விற்பனையான விலை) :-
செவ்வந்தி ரூ.60 (ரூ.160), ஜாதி மல்லி ரூ.320 (ரூ.800), முல்லை ரூ.240 (ரூ.400), செண்டு மல்லி ரூ.40 (ரூ.100), வாடாமல்லி ரூ.40 (ரூ.80), பட்டன் ரோஜா ரூ.120 (ரூ.240), அரளி ரூ.50 (ரூ.80), தாமரை ஒன்று ரூ.20 (ரூ.30) என்று விலை குறைந்து விற்பனையானது. துளசி மட்டும் வரத்து குறைந்ததால் ஒரு கட்டு ரூ.40-க்கு விற்பனையானது. கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளநிலையில் பூக்களின் விலை குறைந்து இருந்ததால் பூமார்க்கெட்டுக்கு நேற்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பூக்களை வாங்கிச்சென்றனர்.
இதுகுறித்து பூமார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, தற்போது கோவை பூமார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகளவு உள்ளதாலும், பூக்கள் விற்பனை மந்தமாக இருப்பதாலும் பூக்களின் விலை குறைந்து உள்ளது. விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை போன்ற பண்டிகை காலங்கள் நெருங்குவதால் இனி வரும் நாட்களில் பூக்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றனர்.
கிருஷ்ணர் சிலை விலை
கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி கோவை பூமார்க்கெட், ஒப்பணக்காரவீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட இடங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட கிருஷ்ணர்- ராதை சிலைகள், குழந்தை வடிவிலான கிருஷ்ணர், வெண்ணெய் திருடி சாப்பிடும் கிருஷ்ணர், புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் சிலை உள்ளிட்ட பல்வேறு வர்ணம் தீட்டப்பட்ட கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
அதில் வர்ணம் தீட்டப்பட்ட சிறிய அளவிலான சிலை ரூ.50 முதல் ரூ.100 வரையும், கிருஷ்ணர், ராதையுடன் கூடிய 1½ அடி உயர சிலை ரூ.1,000, கிருஷ்ணனர் மட்டும் உள்ள தனி சிலை ரூ.800 முதல் ரூ.900 மற்றும் 2 அடி சிலை ரூ.2,000 வரையிலான விலையில் கண்கவர் கிருஷ்ணர் சிலைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.