தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயர்வு

ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மல்லிகை கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.

Update: 2022-09-01 13:38 GMT

ஆரல்வாய்மொழி, 

ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மல்லிகை கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அவற்றை வாங்கி செல்ல வெளிமாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

இந்தநிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியதையடுத்து அங்கிருந்து தினமும் ஏராளமானோர் பூக்கள் வாங்க தோவாளைக்கு வருகிறார்கள். மேலும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால், விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

மல்லிகை ரூ.2,500

நேற்று முன்தினம் ரூ.1,800-க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.700 உயர்ந்து ரூ.2,500-க்கு விற்பனையானது. இதுபோல் ரூ.1,300-க்கு விற்பனையான பிச்சி ரூ.1,300-ஆகவும், ரூ.1000-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,500-க்கும் விற்பனையானது.

தோவாளை மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.200, முல்லை ரூ.1,250, சம்பங்கி ரூ.125, வாடாமல்லி ரூ.200, துளசி ரூ.30, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.5, கோழிபூ ரூ.70, பச்சை ஒரு கட்டு ரூ.10, ரோஸ் பாக்கெட் ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.200, ஸ்டெம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.320, மஞ்சள் ேகந்தி ரூ.45, சிவப்புக்கேந்தி ரூ.50, சிவந்தி மஞ்சள் ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.220, கொழுந்து ரூ.90, மருக்கொழுந்து ரூ.120 என விற்பனையானது.

காரணம் என்ன?

பூக்களின் விலை உயர்வு குறித்து வியாபாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. ஆனால் மழை பொழிவால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் வரத்து குறைவாக உள்ளது. அதாவது பொதுவாக 1000 கிலோ வரும் இடத்தில் 200 கிலோ அளவில் மட்டுமே பூக்கள் வந்தன. இதனால், பூக்களின் விலை உயர்ந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்