சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் உடைந்தது 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் உடைந்தது. 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Update: 2022-10-14 23:15 GMT

சேலம்,

பரவலாக மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதுதவிர காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடபப்ட்டுள்ளது. அப்படி திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றின் இரு கரைகளயைும் தொட்டபடி செல்கிறது.

செக்கானூர் நீர்மின் தேக்க நிலையம், நெரிஞ்சிப்பேட்டை நீர்மின்தேக்க நிலையம், கோனேரிபட்டி நீர்மின் தேக்க நிலையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து தேவூர் அருகே ஊராட்சி கோட்டை நீர்மின் தேக்க நிலையம் பகுதியில் கதவணை வழியாக சீறி பாய்ந்து சென்றது.

வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு

இதற்கிடையே கல்வராயன் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் கரியகோவில் மற்றும் பாப்பநாயக்கன்பட்டி நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வருகிறது.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நேற்று அதிகாலை முதல் ஆத்தூர் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விநாயகபுரம் தடுப்பணையில் தண்ணீர் அருவி போல கொட்டியது.

தரைப்பாலம் உடைந்தது

ஆத்தூர் கோட்டை வசிஷ்டர் நதி பாலம் தற்போது புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பொதுமக்கள் தற்காலிகமாக சென்று வர பாலம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. வசிஷ்ட நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

அந்த பாலத்தை பயன்படுத்தி வந்த கோட்டை, உப்பு ஒடை, முல்லைவாடி, வடக்கு காடு, கல்லாநத்தம், துலுக்கனூர், செட்டில்மெண்ட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் புதுப்பேட்டை, முல்லை வாடி பாலம் வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாயினர். தற்போது பாலம் சீரமைப்பு பணி நடந்து வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மழை அளவு

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 63.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

எடப்பாடி-27, ஓமலூர்-19.6, ஆணைமடுவு-15, கரியக்கோவில்-14, ஏற்காடு-11.2, காடையாம்பட்டி-11, சேலம்-10.1, மேட்டூர்-6.6, பெத்தநாயக்கன்பாளையம்-5.

Tags:    

மேலும் செய்திகள்