தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 6 தரைப்பாலங்கள் மூழ்கின

தொடர் மழையினால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 6 தரைப்பாலங்கள் மூழ்கியதால் கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-13 18:45 GMT

நெல்லிக்குப்பம்:

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் மக்களை பெரும் பீதிக்கு உள்ளாக்கியது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த புயல், கரையை கடக்கும் சமயத்தில் வலுவிழந்ததால் பெரியளவில் சேதங்கள், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள், குறிப்பாக கடலோர கிராமங்களை சேர்ந்தவர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை மறுநாள் (16-ந் தேதி) வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் மழை

அதன்படி மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது.

இடையிடையே அவ்வப்போது இடி- மின்னலுடன் கனமழையாகவும் கொட்டித்தீர்த்தது.

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு

மேலும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அவை வேகமாக நிரம்பி வருகின்றன. ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவான 119 அடியில் 117 அடியை தண்ணீர் எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர், தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட தென்பெண்ணையாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரத்து 639 கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் அணைக்கட்டுகள் நிரம்பி வழிகிறது.

6 தரைப்பாலங்கள் மூழ்கின

தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற நிலையில் அதிலிருந்து பிரியும் கிளை ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக சித்தேரி, விஸ்வநாதபுரம், மேல்குமாரமங்கலம், கண்டரக்கோட்டை, மருதாடு, கும்தாமேடு ஆகிய இடங்களில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மருதாடு தடுப்பணை வழியாக யாரும் செல்லாத வகையில் போலீசார் பேரிகார்டு வைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீன்பிடிக்க வந்தவர்களையும், செல்பி எடுக்க வந்தவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்