சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு; பாலம் அடித்து செல்லப்பட்டது-2 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

சின்னாற்றில் வெள்ளப்பெருக்கால் பாலம் உடைந்ததால் 2 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Update: 2022-10-21 18:45 GMT

பாலக்கோடு:

சின்னாறு அணை

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள சின்னாறு அணை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுமையாக திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே மழை குறைந்ததால் சின்னாறு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் இந்த அணையில் இருந்து உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சின்னாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது.

இதனால் சின்னாறு அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தது. குறிப்பாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று முன்தினம் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

வெள்ளப்பெருக்கு

இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் 3 மதகுகளும் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சின்னாற்றை ஒட்டி அமைந்துள்ள கரகூர், அத்திமுட்லு உள்ளிட்ட கிராமங்களில் சின்னாற்றை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் விவசாய விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

பாலம் அடித்து செல்லப்பட்டது

சின்னாறு அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சக்கிலிநத்தம் கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தின் ஒரு பகுதி தடுப்பு சுவர்கள் அடித்து செல்லப்பட்டு பாலம் துண்டிக்கப்பட்டது. இந்த பாலம் சேதம் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

பாலம் துண்டிப்பு ஏற்பட்ட பகுதியான சக்கிலிநத்தம் மற்றும் பிக்கிலி கிராமங்களை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆற்றங்கரையின் ஒரு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

10 கிலோமீட்டர் சுற்றி செல்ல...

இதனால் இந்த இரு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பாலம் சேதம் அடைந்திருப்பதால் கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பென்னாகரம் மற்றும் பாலக்கோடு தாலுகா பகுதிகள் இணையும் எல்லைப்பகுதியில் இந்த பாலம் அமைந்திருப்பதால் 2 தாலுகாக்களை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறை அதிகாரிகள் பாலம் சேதம் அடைந்த பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். அங்கு வெள்ளப்பெருக்கு குறைந்து பாலத்தில் நீர் வடிந்த பின்பு பாலத்தில் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வெள்ள நீர் வடிந்ததும் இந்த பகுதியில் போக்குவரத்து சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயிர் சேதம் குறித்து ஆய்வு

சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரை பகுதிகளில் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. நெல், கரும்பு, தக்காளி போன்ற பயிர்கள் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்திய மின் மோட்டார்கள் நீரில் மூழ்கின.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், உதவி இயக்குனர் அருள்மணி, தாசில்தார் ராஜசேகர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். தண்ணீர் முழுமையாக வடிந்த பிறகு சேத பாதிப்பு குறித்த விவரங்கள் கணக்கெடுப்பு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்