திற்பரப்பு அருவியில் 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு
குமரி மாவட்டத்தில் பெய்த மழை அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணை பகுதியில் 21.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. திற்பரப்பு அருவியில் 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பெய்த மழை அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணை பகுதியில் 21.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. திற்பரப்பு அருவியில் 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை
குமரி கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதே போல நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு பகுதியில் 21.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல பேச்சிப்பாறை-2, பெருஞ்சாணி-4.4, ஆனைகிடங்கு-19.2, குருந்தன்கோடு-17, பாலமோர்-13.6, இரணியல்-13, கன்னிமார்-10.4, கொட்டாரம்-9.2, பூதப்பாண்டி-10.4, நாகர்கோவில்-8, சுருளோடு-7.2, முள்ளங்கினாவிளை-6.2, மயிலாடி-5.4, குளச்சல்-6.2, திற்பரப்பு-3.4, அடையாமடை-3.2, கோழிப்போர்விளை-3, புத்தன்அணை-3, ஆரல்வாய்மொழி-2.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
உபரிநீர் வெளியேற்றம்
மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 41.93 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1032 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 666 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பாசன கால்வாய் வழியாக வினாடிக்கு 489 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 11.35 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 11.44 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.30 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.81 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பேனர் அருவிக்கு செல்லும் பாதையில் கட்டப்பட்டுள்ளது.
இதற்கிடைேய அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணை அருேக ஆற்றில் கரைபுரண்டு வந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து சென்றனர்.
ரப்பர் உற்பத்தி
சாரல் மழை காரணமாக செண்பகராமன்புதூர், தோவாளை பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.