குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Update: 2022-11-06 18:45 GMT

பொள்ளாச்சி. 

குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குரங்கு நீர்வீழ்ச்சி

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் வனத்துறை கட்டுப்பாட்டில் குரங்கு நீர்வீழ்ச்சி(கவியருவி) உள்ளது. இங்கு வால்பாறை சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதிகளில் பெய்யும் மழை மூலம் நீர்வரத்து உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களில் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் பருவமழை குறைந்ததால் நீர்வரத்து குறைய தொடங்கியது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

குளிக்க தடை

இந்தநிலையில் வார விடுமுறையான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். காலை 7 மணியளவில் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

இதையடுத்து திடீரென ஆழியாறு மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 1.30 மணியளவில் சுற்றுலா பயணிகள் குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்தனர். இதனால் சுற்றுலா வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்றும் (திங்கட்கிழமை) மழை அதிகமாக பெய்தால், நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கும் நிலை ஏற்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்