மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

நெல்லையில் பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2023-01-24 20:32 GMT

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையும், இரவு மற்றும் காலை நேரங்களில் பனியின் தாக்கமும் காணப்பட்டது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் பரவலாக மழை பெய்தது.

நெல்லையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை மாநகரில் பேட்டை, டவுன் தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை, எஸ்.என். ஹைரோடு சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. அந்த பகுதிகள் சேறும், சகதியுமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். சாலையில் நடந்து சென்றவர்களும் அவதிப்பட்டனர். இதுதவிர பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலை உள்ளிட்ட சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

இதேபோல் மாவட்டத்தில் சேரன்மாதேவி, களக்காடு, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த பகுதிகளில் ஏராளமான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் நெல் நடவு செய்து உள்ளனர். வடகிழக்கு பருவமழையை நம்பி அவர்கள் பயிரிட்ட நிலையில், மழை குறைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணை பகுதியை பொறுத்தவரை நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைப்பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. சேர்வலாறு அணைப்பகுதியில் 6 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 10.8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இதேபோல் தென்காசியில் நேற்று மதியம் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஆய்க்குடி, ராமநதி, குண்டாறு, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இந்த அருவியில் குளிக்க நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு போன்ற தேயிலை தோட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் அதிக அளவில் விழுந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்