மீஞ்சூர் அருகே வெள்ள தடுப்பு ஒத்திகை
மீஞ்சூர் அருகே வெள்ள தடுப்பு ஒத்திகை நடந்தது.
தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதிகளான விச்சூர், அத்திப்பட்டு புதுநகர் போன்ற இடங்களிலும் ஆரணியாறு வடிநில பகுதியான அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் கிராம பகுதிகள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கையாக ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர், பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. ஆகியோர் தலைமையில் 10 துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் திருவள்ளூர் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி விச்சூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், சோழவரம் ஒன்றிய ஆணையாளர் குலசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் வெள்ளத்தடுப்பு ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அத்திப்பட்டு ஊராட்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரூபன்குமார் தலைமையில் தனிதாசில்தார் சுமதி, ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம், பொன்னேரி நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி உள்பட 10 துறை அதிகாரிகள் செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.
இதில் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணைத் தலைவர் எம்டிஜி.கதிர்வேல் வார்டு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற வெள்ளத்தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சியில் பொன்னேரி ஆர்.டி.ஓ. காயத்ரி தலைமையில் 10 துறை அதிகாரிகள் செய்முறை விளக்க பயிற்சி அளித்தனர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.