கொடிவேரியில் வெள்ளப்பெருக்குசுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Update: 2023-10-16 01:05 GMT

கடத்தூர்

கொடிவேரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொடிவேரி அணை

கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.

குறிப்பாக வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து மகிழ்வர். மேலும் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வறுவல்களை ருசித்து உண்பர். எனவே ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்றாக கொடிவேரி அணை உள்ளது.

தடை

இந்த நிலையில் கொடிவேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை நீரானது பவானி ஆற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக கொடிவேரி அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது

இதையடுத்து கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வரவும், அணையில் குளிக்கவும் பொதுப்பணித்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரி அணைக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் கால்நடைகள் மேய்க்கவோ, துணி துவைக்கவோ யாரும் செல்லக்கூடாது எனவும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்