வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது
முதுகுளத்தூர் அருகே வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
உடைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரானது பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் மதகு அணைக்கு வந்தடைந்தது. அணையில் இருந்து 4,000 கன அடி தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய், பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீர் பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு செல்லும் வழித்தடங்களில் வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாராமல் ஆங்காங்கே காட்டு கருவேல மரங்கள், புற்கள் அதிகமாக வளர்ந்து இருப்பதால் தண்ணீர் கண்மாய்க்கு முறையாக சென்றடையாமல் ஆங்காங்கே நிரம்பி உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
பாதிப்பு
தற்போது சாம்பகுளம், உடைகுளம் கண்மாய் நிரம்பி அங்குள்ள விவசாய நிலங்கள் 240 ஏக்கரில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்டவைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடைகுளம் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயை எந்திர உதவியுடன் மண் வைத்து அடைத்துவிட்டனர்.
இதனால் சாம்பக்குளம் இந்திரா நகர் பகுதி வழியாக செல்லும் வரத்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த வெள்ள நீர் குடியிருப்பு பகுதி முழுவதும் சூழ்ந்துஉள்ளது. சாம்பக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் காலனி பகுதியில் வைகை ஆற்று தண்ணீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும் வீட்டை சுற்றி தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த வீடுகள் இடியும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வேண்டுகோள்
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் வீட்டை சுற்றி வைகை தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் பாம்பு, பூச்சிகள் வீட்டுக்கு வருவதாகவும், அந்தபகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.