சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு

தேன்கனிக்கோட்டை அருகே சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2022-10-15 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கனமழை காரணமாக தளி பெரிய ஏரி நிரம்பியது. இதில் இருந்து உபரிநீர் வெளியேறியதால் சனத்குமார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அடவிசாமிபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடந்து சென்றனர். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

வீடுகளில் தண்ணீர் புகுந்தது

இந்த கனமழையால் கொரட்டகிரி கிராமத்திற்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் இருந்த உணவு பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்டவைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தது. மேலும் வீடுகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வீடுகளில் மழைநீர் புகுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்