தாமிரபரணி ஆற்றில் 'திடீர்' வெள்ளம்
குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் திடீரென வெள்ளம் வரத்து அதிகரித்தது. இதனால், தடுப்பணை மீது வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
குழித்துறை:
குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் திடீரென வெள்ளம் வரத்து அதிகரித்தது. இதனால், தடுப்பணை மீது வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
கோடை வெயில்
மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக அடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்கிறது.
மழை இல்லாத காரணத்தால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குறைவான அளவு தண்ணீரே பாய்ந்தது. தடுப்பணையின் அடிப்பகுதியில் உள்ள மதகுகள் வழியாகவே வெள்ளம் பாய்ந்தது. இதனால் பொதுமக்கள் தடுப்பணையின் மீது இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்று வந்தனர்.
திடீர் வெள்ளம்
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் மார்த்தாண்டம் குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அத்துடன் திருவட்டார், குலசேகரம் மற்றும் மலையோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குழித்துறை ஆற்றில் தண்ணீர் வரத்து திடீரென்று அதிகரித்தது.
ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து தடுப்பணைக்கு மேலே வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இதனால் தடுப்பணையின் மீது இருசக்கர வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் தடுப்பணையின் குறுக்கே கம்பியால் தடுப்பு வேலி அமைத்தனர். இதனால் நேற்று தடுப்பணை வழியாக இருசக்கர வாகனங்களில் யாரும் செல்லவில்லை. அதேநேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தடுப்பணை மீது நடந்து சென்றனர்.