குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு
வனப்பகுதியில் கனமழை பெய்ததால் குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
வனப்பகுதியில் கனமழை பெய்ததால் குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குரங்கு நீர்வீழ்ச்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அருகே ஆழியாறில் கவியருவி என்ற குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால், அவ்வப்போது நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. இதனால் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது.
வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமானது. காலை 7 மணியளவில் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகு நேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர். கூட்டம் அதிகளவில் இருந்ததால், காத்திருந்து குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் ஆழியாறு மற்றும் அதன் சுற்று வட்டார வனப்பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மதியம் 2.30 மணியளவில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.