குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலத்தில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது
குற்றாலத்தில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழையினால் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். காலை மற்றும் மதியம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டனர்.
குடும்பமாகவும், நண்பர்களாகவும் ஏராளமானோர் குவிந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அவ்வப்போது போலீசார் சீர்செய்தனர்.
வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில் குற்றாலம் ஐந்தருவியில் நேற்று மாலை 4.45 மணியளவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்தானது என்பதால் அருவியில் நின்றவர்களை போலீசார் வெளியேற்றினார்கள்.
இதேபோல் மாலை 5.25 மணியளவில் மெயின் அருவியிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்தால்தான் குளிக்க அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சீசன் நிலவரம்
குற்றாலத்தில் பகல் முழுவதும் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது.
இந்த சாரல் மழை தொடர்ந்து நீடித்தால் சீசன் களைகட்டும் என தெரிகிறது.
மழை அளவு
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
கருப்பாநதி -3, குண்டாறு -2, அடவிநயினார் -5, தென்காசி -1, சிவகிரி -4, பாபநாசம் -1.