சாலையோரம் கொடிக்கம்பங்கள் நடுவதற்கு தடை

தஞ்சை மாவட்டத்தில் சாலையோரம் கொடிகம்பங்கள் நட தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் அறிவித்துள்ளனர்.

Update: 2023-02-02 21:01 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் சாலையோரம் கொடிகம்பங்கள் நட தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் அறிவித்துள்ளனர்.

சாலையோரம் கொடிக்கம்பங்கள்

தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் சார்பில் விடுத்துள்ள செய்தி்க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு ஆணை படி சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் கொடி கம்பங்கள் நட தடைவிதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்வுகளுக்காக நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரமளவிற்கு இரும்பு கொடி கம்பங்கள் நடப்பட்டு வரப்படுகிறது.சாலையோரங்களில் கொடி கம்பங்கள் உறுதியற்ற முறையில் நடப்படுவதால் கொடிகம்பங்கள் சாய்ந்துவிழும் அபாயமும், கொடிகளால் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு இடையூறு ஏற்படுத்தி எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சாலையோரம் இரும்பு கொடி கம்பங்களை நடுவது என்பது கோர்ட்டு விதித்த தடையாணையை மீறும் குற்ற செயலாகும்.

ஐகோர்ட்டு தடை

கடந்த 2019 -ம் ஆண்டு சென்னையில் இது போன்று சாலையோரம் அனுமதியின்றி நடப்பட்ட ஒரு இரும்பு கொடி கம்பம் விழுந்தனால் ஒரு பெண் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற உயிரிழப்பு வரும் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஏற்படாத வகையில் அனைவரும் ஐகோர்ட்டு ஆணையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.அப்படி கொடி கம்பங்கள் பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்துவோர் நீதிமன்ற அனுமதியுடன் உரிய துறை அனுமதி பெற்று நிகழ்ச்சியின் போது நிகழ்விடத்திற்கு 50மீட்டர் தொலைவிற்குள் மட்டுமே இரும்பு கொடி கம்பங்களை தவிர்த்து ஆபத்தில்லாத இலகுரக கொடி கம்பங்களை நடலாம். அதுவும் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாதவாறு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் ஐகோர்ட்டு ஆணையை பின்பற்றி விபத்து மற்றும் உயிரிழப்புகளை தவிர்த்து பாதுகாப்பான மாவட்டமாக தஞ்சையை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்