சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-21 18:45 GMT

சுசீந்திரம்:

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்பத்திருவிழா

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு தம்பையா ஓதுவாரின் திருமுறை பாராயணம், 8.45 மணிக்கு கொடிபட்டத்தை மேளதாளத்துடன் 4 ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருதல் போன்றவை நடந்தது. 9.25 மணிக்கு தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் நித்திய காரிய யோகஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி கொடியேற்றினார். பின்னர் கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனையை வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிவபிரசாத் நடத்தினார். தொடர்ந்து அலங்கார தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து தேர்களுக்கு கால்நாட்டு வைபவம் நடந்தது.

மேயர் மகேஷ்

கொடியேற்று விழாவில் மாவட்ட தி.மு.க. செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், மாவட்ட துணைச்செயலாளர் பூதலிங்கம்பிள்ளை, சுசீந்திரம் தி.மு.க. வார்டு செயலாளர் அழகர் தாமோதரன், முன்னாள் கோவில் கண்காணிப்பாளர் சோணாச்சலம், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா, துணைத்தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, கவுன்சிலர்கள் செண்பகவல்லி, வசந்தி, நீலாவதி, சுரேஷ், வள்ளியம்மாள், கதிரேசன், வீரபத்திரப்பிள்ளை, காசி, சுரேஷ், ஆணி எலிசபெத், கலைச்செல்வி, சுசீந்திரம் நடுத்தெரு ஊர்வகை டிரஸ்டி ரவீந்திரன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் தொழில் அதிபர்கள், பக்த சங்க நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, சொல்அரங்கம், பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தேரோட்டம்

விழாவில் 29-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், இந்திரன்தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. இரவு 10 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடக்கிறது.

விழாவில் 30-ந் தேதி இரவு 8 மணிக்கு மேல் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் சாமியும், அம்பாளும், பெருமாளும் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில் மூன்று முறை உலாவரும் தெப்பத்தினை பக்தர்கள் இழுத்து வருவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பக்த சங்கத்தினர், பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்