தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கொடிநாள் நிதி ரூ.1 கோடி வசூல்-கலெக்டர் சாந்தி தகவல்

Update: 2022-12-08 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கொடி நாள் நிதியாக ரூ.1 கோடியே 4 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

கொடி நாள்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி கொடி நாள் நிதி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

பனி, வெயில், மழை எதுவும் பாராமல் நமது தேசத்தை பாதுகாக்கும் படைவீரர்கள் மற்றும் போர் வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறுவோம். படைவீரர் கொடி நாளில் அரசு அதிகாரிகளால் திரட்டப்படும் நிதி தன் உயிரை பணயம் வைத்து நாட்டு எல்லையில் பாடுபடும் போர்வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு பல்வேறு நிதியுதவிகளை வழங்க பயன்படுத்தப்படுகிறது.

கூடுதல் நிதி வசூல்

தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் இலக்கில் 90 சதவீதம் வசூல் செய்யப்பட்டு ரூ.1 கோடியே 4 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இலக்கினை விட கூடுதலாக வசூல் செய்து வழங்க அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கென தனியாக ஒரு பாலிகிளினிக் மருத்துவமனை நிறுவிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம் என்றும் முன்னாள் படைவீரர் நலனில் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்து கொள்கிறேன். மேலும், முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அணுகி முழுமையாக பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

நலத்திட்ட உதவி

இதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் 20 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி உதவி கலெக்டர் ஜெயக்குமார், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வெங்கடேஷ்குமார், கர்னல் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்