கொடிநாள் வசூலில்சாதனை படைத்த அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்:கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
கொடிநாள் வசூலில் சாதனை படைத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். வழங்கினார்
தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கொடிநாள் வசூலில் சாதனை படைத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தீருதவித்தொகை 2-வது தவணை தலா ரூ.6 லட்சம் பெறுவதற்கான ஆணையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவ சதையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரணம் உதவித்தொகைக்கான காசோலைகளையும், 7 தூய்மைப் பணியாளர்களுக்கு தூய்மைப்பணியாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு திருமண மானிய நிதியுதவி ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும், ஒருவருக்கு புற்றுநோய் நிவாரண நிதியுதவி ரூ.14 ஆயிரத்துக்கான காசோலையையும், ஒருவருக்கு கல்வி உதவித்தொகை ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.
அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
பின்னர் படைவீரர் கொடிநாள் வசூலில் 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் அதிகமாக வசூலித்த பல்வேறு துறைகளை சார்ந்த 8 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், துணை கலெக்டர் (பயிற்சி) பிரபு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.