யாருக்கும் பயனின்றி காட்சிப்பொருளாய் இருக்கும் நடை மேம்பாலம்

உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் யாருக்கும் பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் ஆபத்தான வகையில் சாலையை கடந்து செல்கின்றனர்.

Update: 2023-01-22 16:47 GMT

உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் யாருக்கும் பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் ஆபத்தான வகையில் சாலையை கடந்து செல்கின்றனர்.

பயனில்லா நடைமேம்பாலம்

உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள பழனி சாலையில் வாகனப்போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இதேபோல் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக இருப்பதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் இந்த சாலையை கடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

மேலும் வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு இங்கு பல லட்சம் ரூபாய் செலவில் அழகிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. உயரமாக உள்ள இந்த பாலத்தில் பொதுமக்கள் ஏறி, இறங்குவதற்கு வசதியாக படிக்கட்டுகள் மற்றும் 2 'லிப்டு'களும் அமைக்கப்பட்டுள்ளன.

காட்சி பொருளானது

இவ்வாறு அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

குறிப்பாக சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் பொதுமக்களுக்கு இந்த நடை மேம்பாலம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

இந்த நிலையில் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு 'லிப்ட்'டுகளும் பழுதடைந்ததை தொடர்ந்து பாலத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த 'லிப்ட்'டுகள் சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. இதேபோன்று பாலத்தின் படிக்கட்டில் உள்ள இரும்பு கேட்டும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் நடை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

பொதுமக்களுக்கு சிரமம்

தற்போது பொதுமக்கள் பாலத்தில் செல்ல முடியாமல் சாலையை நேரடியாக கடந்து செல்கின்றனர். சாதாரண நேரங்களில் பொதுமக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் அதிக வாகனப்போக்குவரத்து உள்ள நேரங்களிலும், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை நேரங்களிலும் சாலையை கடக்க பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். சிலர் அவசர கதியில் சாலையை கடப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு யாருக்கும் பயனின்றி உள்ள இந்த நடை மேம்பாலத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்