ஆம்னி பஸ்களில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்: பஸ் உரிமையாளர்கள் சங்கம் பட்டியல் வெளியிட்டது
ஆம்னி பஸ்களில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்: பஸ் உரிமையாளர்கள் சங்கம் பட்டியல் வெளியிட்டது.
சென்னை,
நேரத்துக்கு தகுந்தாற்போல நிர்ணயிக்கப்படும் ஆம்னி பஸ் கட்டணத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று ஒவ்வொரு பண்டிகைகளின்போதும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பஸ் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 27-ந்தேதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகளுடன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆம்னி பஸ் கட்டணத்தை பொதுமக்களை பாதிக்காத வகையில் குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
போக்குவரத்து துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, ஓரிரு தினங்களில் பஸ் கட்டணம் தொடர்பாக தீர்வு அளிப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்து இருந்தனர். அதன்படி, தலைநகர் சென்னையில் இருந்து ஒவ்வொரு நகரங்களுக்கும் வசூலிக்கப்படவேண்டிய அதிகபட்ச கட்டணத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாதாரண இருக்கை, படுக்கை வசதிக்கொண்ட பஸ், குளிர்சாதன இருக்கை, படுக்கை வசதிக்கொண்ட பஸ், வால்வோ இருக்கை, படுக்கை வசதிக்கொண்ட பஸ் ஆகியவற்றில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டண பட்டியலை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகையை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.