விஷம் குடித்து மீன் வியாபாரி தற்கொலை
திருவட்டார் அருகே மீன் வியாபாரி விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
மார்த்தாண்டத்தை அடுத்த நந்தன்காடு ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 42), மீன் வியாபாரி. இவருக்கு ரீனா (37) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். பிரபுவின் தயாரின் வீடு ஆற்றூரில் உள்ளது. நேற்று காலை பிரபு, தாயார் புஷ்பலீலாவின் வீட்டுக்கு வந்து அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு புஷ்பலீலா தனது மற்ற பிள்ளைகளிடம் ஆலோசனை செய்து எழுதி தருவதாக கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த பிரபு, தாயார் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் விரைந்து வந்து பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.