பொன்னமராவதி:
மீன்பிடி திருவிழா
பொன்னமராவதி ஒன்றியம் பி.உசிலம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள தாழ்ப்பாய் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணியளவில் மிராஸ் ராஜா அம்பலகாரர் கண்மாய் கரையில் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வெள்ளை துண்டை வீசினார். இதையடுத்து பொதுமக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன் பிடித்தனர்.
இதில் ஜிலேபி, கட்லா, விரால், கெண்டை, அயிரை உள்ளிட்ட பலவகை மீன்கள் கிடைத்தன. இதில் பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொட்டியம்பட்டி, ஏனாதி, பிடாரம்பட்டி, வேகுப்பட்டி, கட்டையாண்டிபட்டி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஆலவயல், அம்மன்குறிச்சி, செம்பூதி, கொன்னையூர், கொப்பனாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.
திருமயம்
இதேபோல் திருமயம் அருகே உள்ள முள்ளிப்பட்டி வாரியக்கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் தண்ணீர் வற்றியவுடன் மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு நேற்று காலை ஊத்தா குத்து மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் திருமயம், திண்டுக்கல், திருப்பத்தூர், மேலூர், மணப்பாறை, பூலாங்குறிச்சி, பொன்னமராவதி, ராங்கியம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி ஊத்தாவை வைத்து போட்டி போட்டு மீன் பிடித்தனர். அவர்களுக்கு நாட்டு வகை மீன்களான கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி உள்பட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. அந்த மீன்களை அவர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.