நீர்பழனி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா

விராலிமலை அருகே நீர்பழனி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் மூட்டை மூட்டையாக மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.

Update: 2022-10-31 19:16 GMT

பெரியகுளம்

விராலிமலை தாலுகா, நீர்பழனியில் விராலிமலை-கீரனூர் சாலையோரம் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் தண்ணீர் நிரம்பி 2 மாதங்களாக கலிங்கி வழியாக உபரி நீர் வெளியேறி வந்தது. அப்போது குளத்திற்கு பல்வேறு வகையான மீன்கள் வந்து சேர்ந்தது. தொடர்ந்து நீர்பழனி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பெரிய குளத்தின் மழை நீரை வைத்து 3 போகமும் மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு குளத்தில் தண்ணீர் சிறிது வற்றி காணப்பட்ட நிலையில் திடீரென பெய்த மழையால் மீண்டும் நீர்பழனி பெரிய குளத்தில் தண்ணீர் சிறிதளவு பெருகியது. தற்போது அந்த தண்ணீரை வைத்து அப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் நடவு பணியை மேற்கொண்டனர்.

மீன்பிடி திருவிழா

இந்நிலையில் குளத்தில் மீண்டும் தண்ணீர் வற்றிய நிலையில் பருவ மழை பெய்து மழை நீர் தேங்கினால் குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க முடியாது என்று கருதிய நீர்பழனி ஊர் முக்கியஸ்தர்கள் நேற்று மீன் பிடி திருவிழா நடத்துவது என்று முடிவு செய்தனர். அதுபற்றிய தகவல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. மேலும் தகவலானது பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரவியது.

இதையடுத்து நேற்று அதிகாலை 2 மணியிலிருந்து கீரனூர், மாத்தூர், மண்டையூர், இலுப்பூர், நார்த்தாமலை, விராலிமலை, மலம்பட்டி, ஆவூர், வீரப்பூர், மணப்பாறை, பாத்திமாநகர், மணிகண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வந்து குளத்து கரையில் திரண்டிருந்தனர். இதனால் குளத்தின் கரையான விராலிமலை-கீரனூர் சாலையில் சரக்கு வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் நிறுத்தி இருந்ததால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டது.

மீன்களை அள்ளிச்சென்றனர்

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் நீர்பழனி கிராம காவல் தெய்வத்திற்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கிராம முக்கியஸ்தர்கள் குளத்துக் கரையின் மேல் நின்று வெள்ளைத்துண்டை வீச அங்கு தயாராக நின்ற ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் தாங்கள் கொண்டு வந்த கச்சா, தூரி, வலை, பரி உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களைக் கொண்டு போட்டிப்போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர்.

இதில் விரால், ஜிலேபி கெண்டை, கட்லா கெண்டை, வலணை கெண்டை, வாவல் மீன், குறுங்கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 5 கிலோ எடை வரையிலான மீன்கள் கிடைத்தன. அவற்றை சாக்கு, கட்டப்பை மற்றும் கூடைகளில் அள்ளிச் சென்றனர். பின்னர் அவற்றை தங்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு பகிர்ந்து அளித்து மகிழ்ச்சியுடன் சமைத்து உண்டனர். நீர்பழனி பெரிய குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றதால் நேற்று அதிகாலையில் இருந்து பகல் 11 மணி வரை விராலிமலை -கீரனூர் சாலையில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்