கோபால்பட்டி அருகே உற்சாகமாக நடந்த மீன்பிடி திருவிழா
கோபால்பட்டி அருகே மீன்பிடி திருவிழா உற்சாகமாக நடந்தது.
கோபால்பட்டி அருகே உள்ள வி.குரும்பப்பட்டியில் கல்லாங்குளம் கண்மாய் உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் கல்லாங்குளம் கண்மாய் நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் கல்லாங்குளத்தில் தண்ணீர் வற்றும் காலக்கட்டத்தில் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். தற்போது கல்லாங்குளத்தில் தண்ணீர் வற்றி வருகிறது. இதையொட்டி மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று கல்லாங்குளத்தில் மீன்பிடி திருவிழா களைகட்டியது. இதையொட்டி வி.குரும்பப்பட்டி மட்டுமின்றி கோபால்பட்டி, நத்தம், செங்குறிச்சி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், குளத்தில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். அவர்கள் ஊத்தா என்ற மூங்கில் கூடைகள், வலைகளை வைத்து உற்சாகத்துடன் மீன்களை பிடித்தனர். சில இளைஞர்கள் அங்கும், இங்குமாக துள்ளிய மீன்களை கைகளாலேயே லாவகமாக பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு, புல்லுக்கெண்டை, பாறை, ஜிலேபி ரக மீன்கள் சிக்கியது. அதன்பிறகு பிடிபட்ட மீன்களை கிராம மக்கள் தங்களது வீடுகளில் சமைத்தனர். இதனால் வி.குரும்பப்பட்டி கிராமத்தில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது. மேலும் மீன்குழம்பு சாப்பாட்டை அக்கம்பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.