மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதில் மீனவர்கள் மும்முரம்
தஞ்சை மாவட்டத்தில் தடைக்காலம் தொடங்கியது. இதையடுத்து மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதில் மீனவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் தடைக்காலம் தொடங்கியது. இதையடுத்து மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதில் மீனவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
மீன்பிடி தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்க காலம் எனக்கூறி மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தடைக்காலத்தை ஆண்டுதோறும் அமல்படுத்தி வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஏப்ரல் மாதம் 15 முதல் ஜூன் மாதம் 14-ந் ேததி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உள்பட ஒட்டு மொத்த மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 15-ந் தேதி வரை ஒரு மாதமும், இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில் ஒரு மாதமும் தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும் அல்லது தடைக்காலத்தை 45 நாட்களாக குறைக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
146 விசைப்படகுகள்
இதை நிராகரித்த மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல் மீன்பிடி தடைக்காலத்தை நேற்று முதல் அமல்படுத்தி உள்ளன. அதன்படி நேற்று முதல் தடைக்காலம் தொடங்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 146 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி உள்ள விசைப்படகுகளில் இருந்து வலை, ஐஸ் பெட்டி போன்ற உபகரணங்களை 61 நாட்கள் தடை என்பதால் வீட்டிற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைப்பதற்கு மீனவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.