நடுக்கடலில் 5 மணி நேரம் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் 5 மணி நேரம் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2023-06-11 19:15 GMT

வேதாரண்யம் அருகே படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் 5 மணி நேரம் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

கடலில் படகு கவிழ்ந்தது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்தவர் சகாதேவன். மீனவரான இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே ஊரைச்சேர்ந்த அஜித், பாரதி, மனோ ஆகிய மீனவர்களும் நேற்று முன்தினம் மதியம் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த பைபர் படகு நிலை தடுமாறி கடலில் கவிழ்ந்து மூழ்கியது.

கரை சேர்த்தனர்

அந்த படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து 5 மணி நேரம் தத்தளித்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்களை அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு பைபர் படகில் வந்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் புஷ்பவனம் கடற்கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.

கடலில் விழுந்து தத்தளித்த மீனவர்கள் 4 பேரும் அதிக அளவு கடல் நீரை குடித்திருந்ததால், அவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்டுபிடிக்க முடியவில்லை

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலில் மூழ்கிய படகை மீட்க புஷ்பவனம் மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். வெகுநேரம் தேடியும் கவிழ்ந்த இடத்தில் படகை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் கரை திரும்பி விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்