தேவதானப்பட்டியில் மீனவர்கள் சாலை மறியல்

தேவதானப்பட்டியில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-18 17:01 GMT

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையில் குத்தகை அடிப்படையில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களை பிடிப்பதற்காக மஞ்சளாறு அணை பங்கு மீனவ அமைப்பினர் உள்ளனர். அந்த அமைப்பை சேர்ந்த 24 பேர் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது உள்ள மீனவர்கள் குறைந்த அளவில் மீன்பிடித்து வருவதால், கூடுதலாக 14 பேர் அணையில் மீன் பிடிக்க அனுமதிக்கும்படி குத்தகை எடுத்த ஒப்பந்ததாரர், மீன்வளத்துறையில் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மஞ்சளாறு அணை பங்கு மீனவ அமைப்பினர் 24 பேர், கூடுதல் நபர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதனை கண்டித்து மீனவர்கள் 24 பேரும் நேற்று தேவதானப்பட்டியில், பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மீனவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்