கருவாடு காய வைக்கும் பணி மும்முரம்

சேதுபாவாசத்திரம் பகுதியில் கருவாடு காய அவைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2022-12-18 20:00 GMT

சேதுபாவாசத்திரம் பகுதியில் கருவாடு காய அவைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கருவாடு

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு 4,500 நாட்டுப்படகுகள் மூலமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகிறார்கள். மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் இருந்து 146 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள்.

இந்த படகுகளில் மீனவர்கள் அன்றாடம் பிடித்து வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை உடனடியாக விற்பனை செய்தும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகின்றனர். அதேசமயம் இதில் கழிவாக கூடிய மீன்களையும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் செய்துவருகின்றனர்.

தரம் பிரிக்கும் பணி

உணவிற்கு பயண்படும் கருவாடுகளைவிட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறியவகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது.

மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என அன்றாடம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

பணிகள் மும்முரம்

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கருவாடு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டது. வெயில் இல்லாததால் கருவாடுகளை காய வைக்க முடியாமல் மீனவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் தினந்தோறும் வேலை செய்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வந்தனர்.

இந்த நிலையில் மாண்டஸ் புயலுக்கு பின் கடந்த ஒரு வாரமாக சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்து வருகிறது. இதால் கருவாடு காய வைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்