விஷத்துடன் வந்த மீனவர்களால் பரபரப்பு
மீனவர்கள் குறைகேட்பு கூட்டத்தில் விஷத்துடன் மீனவர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைகேட்பு கூட்டத்தில் விஷத்துடன் மீனவர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைகேட்பு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், சிவராமச்சந்திரன், அப்துல்காதர்ஜெயிலானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-
தேவதாஸ்:- தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்ல தயாராக உள்ளோம். ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து விலை கிடைக்காமல் செய்வதை தடுக்க வேண்டும். படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க அனைத்து வசதிகளுடன் கூடிய ஜெட்டி ஏற்படுத்தி தரவேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். டீசல் விலை அதிகமாகிவிட்டதால் மானிய விலை டீசலை அதிகப்படுத்தி தரவேண்டும். உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வேண்டும். கச்சத்தீவின் உரிமையை பெற்றுத்தர வேண்டும்.
போஸ்:- ரூ.80 லட்சம் மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி படகு வழங்கப்பட்டுள்ளது. இதனை நிறுத்த துறைமுகம் இல்லை. மீன்பிடிக்க அருகில் உள்ளவர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். கேரளா சென்றுதான் மீன்பிடிக்க வேண்டி உள்ளது. இதனால் தொழிலின்றி ரூ.16 லட்சம் கடன் தொகையை கட்ட முடியாமல் தவிக்கிறோம். இந்த கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும். அல்லது எங்களின் படகுகளை பெற்றுக்கொண்டு பணம் தாருங்கள். எங்களின் அவதியை கண்டு படகு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தற்போது வேண்டாம் என்று கூறிவருகின்றனர்.
பரபரப்பு
கருணாமூர்த்தி:- வெளிமாவட்ட விசைப்படகுகள் இங்கு ஏற்கனவே புழக்கத்தில் உள்ள போலி உரிமம் சான்றிதழ் எண்களை பயன்படுத்தி ராமேசுவரத்தில் மீன்பிடிக்கின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில் விசைப்படகுகள் கணக்கெடுப்பு பணி 5 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். இதன்மூலம் 300 போலி உரிமம் சான்றிதழ் எண்கள் கண்டறியப்படும். இந்த போலி உரிமம் எண்கள் படகுகளால் அரசுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் லிட்டர் டீசல், ரூ.10 கோடி மானியம் வீணாகிறது.
இந்த கூட்டத்தில் பாம்பன் அசிசியன், தங்கச்சிமடம் ரைச்செல், ராமேசுவரம் கிழவச்சாமி ஆகியோர் தாங்கள் கொண்டு வந்துள்ள எலிபேஸ்ட் விஷத்தை தின்று தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கலெக்டரிடம் கூறி எலிபேஸ்ட்டுகளை எடுத்து காட்டினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அந்த எலிபேஸ்ட் விஷத்தை பறித்து அவர்களிடம் குறைகளை கேட்டனர்.
கலெக்டர் உறுதி
அப்போது அவர்கள் கூறியதாவது:- நீலப்புரட்சி திட்டத்தில் 32 மீனவர்கள் அரசால் மானிய விலையில் வழங்கிய ஆழ்கடல் படகு வாங்கி தொழில் செய்து வருகின்றனர். இந்த படகுகள் தரமற்றவையாக உள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பெற்ற வங்கி கடனை செலுத்த முடியாத நிலை உள்ளது. வங்கி நிர்வாகம் எங்கள் நிலையை புரிந்து கொள்ளாமல் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மீன்வளத்துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை. இதே நிலை நீடித்து வருவதால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. இனியாவது அந்த நிறுவனத்திடம் படகுகளை வாங்கி மற்ற மீனவர்களையும் தற்கொலைக்கு தூண்டாதீர்கள். இவ்வாறு கூறினர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.