குறைவான மீன்களே கிடைப்பதால் போதிய வருமானம் இன்றி தவிக்கும் மீனவர்கள்-காவிரி கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பரிசல்கள்

காவிரி ஆற்றில் குறைவான மீன்களே கிடைப்பதால் போதிய வருமானம் இன்றி தேவூர் பகுதி மீனவர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் பரிசல்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

Update: 2023-02-13 20:15 GMT

தேவூர்:

மீனவர்கள்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தேவூர் பகுதியில் கோனேரிப்பட்டி, கோம்புக்காடு, கல்வடங்கம், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், அண்ணமார்கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி, ராமக்கூடல், வேலாத்தாகோவில், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை கடந்து செல்கிறது.

தேவூர் பகுதியில் காவிரி கரையோரப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இவர்கள் இரவு, பகல் பாராமல் காவிரி ஆற்றில் வலைகளை வீசி சிலேப்பி, ஆறால், கல்பாசு, அரஞ்சான், கெண்டை, கெளுத்தி, வாலமீன், விறால், பட்டசுறா, கொக்கு மீன், உள்ளிட்ட மீன் வகைகளை பிடித்து விற்பனை செய்து வந்தனர்,

பரிசல்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் மீனவர்கள், மீன்களை பிடித்து வருகிறார்கள்.

இதனிடையே கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் குறைவான அளவே மீன்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாக ஒரு சில மீனவர்கள் மட்டுமே இரவு நேரங்களில் ஆற்றில் மீன் வலைகளை வீசி குறைவான மீன்களை பிடித்து வருகின்றனர், பகல் நேரங்களில் மீன்பிடி தொழிலை கை விட்டுள்ளதால் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இதனால் மீன்பிடி பரிசல்களை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், தேவூர் பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் ஏராளமான மீனவர்கள் மீன் பிடித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடுவதால் மீன்கள் கிடைப்பது இல்லை. கடந்த மாதங்களில் ஒரு மீனவர் பரிசலில் மீன்பிடிக்க சென்றால் அவருக்கு 10 கிலோவுக்கு அதிகமாக மீன்கள் கிடைத்தன. ஆனால் தற்போது 4 கிலோ வரை மீன்கள் கிடைப்பதே அரிதாக உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்