கடலுக்கு செல்ல தயாராகும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்
தடைக்காலம் முடிந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் பிழைப்புக்காக கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
கொள்ளிடம்:
தடைக்காலம் முடிந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் பிழைப்புக்காக கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
8 ஆயிரம் மீனவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையார் கிராமத்தில் இயற்கை மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம், கூழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் 350-க்கு மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் இந்த துறைமுகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு மீன் மற்றும் கருவாடு ஏற்றுமதியும் நடந்து வருகிறது.
கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்
இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலில் மீன் பிடிப்பதற்கு ஏதுவாக பழையார் மீன்பிடி துறைமுக வளாகத்தில் வலை பின்னுதல், சேதம் அடைந்த விசைப்படகுகளை வெல்டிங் செய்து பராமரிப்பு பணிகள் மற்றும் விசைப்படகுகளுக்கு வர்ணம் அடித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் மீனவர்கள் பிழைப்புக்காக கடலுக்கு செல்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். இது குறித்து விசைப்படகு உரிமையாளரும், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவருமான ஜெயப்ரகாஷ் கூறியதாவது:-
பழையார் துறைமுகம் ரூ.26 கோடியில் மேம்பாடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்மையான துறைமுகமாக பழையார் துறைமுகம் திகழ்ந்து வருகிறது. இந்த துறைமுகத்தை மேம்படுத்த அரசு முதற்கட்டமாக ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மீனவர்கள் மீன்பிடி தடைக்காலத்தில் தங்கள் படகுகளை பழுது பார்க்கும் பணி, எந்திரங்களை சரி செய்தல் மற்றும் வலைகளை பராமரித்தல் ஆகிய பணிகளை முடித்து விட்டு மீன் பிடிக்க தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
இது குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறியதாவது:-
மீனவர்கள் கடந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இரண்டு மாத காலமாக கடலுக்கு மீன் பிடிக்க ெசல்லாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலையில் இருந்து வந்தனர்.மேலும் கடலில் மீன் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் ஏப்ரல், மே ஜூன், ஆகிய மூன்று மாதங்களிலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
எதிர்பார்ப்பில் உள்ளோம்
இதனால் விசைப்படகு வைத்திருக்கும் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். மேலும் மீன்வளத்துறை சிறிய படகுகள் மட்டும் 14 நாட்டிக்கல் மைல் தூரம் மட்டும் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது மீன்பிடி தடைக்காலம் முடிவுறும் நிலையில் மீனவர்கள் இந்த ஆண்டாவது கடலில் மீன் வரத்து அதிகமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.
மேலும் இந்த ஆண்டு இனவிருத்திக்காக மீன்களின் அளவு அதிகரித்து காணப்படும். இதனால் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அதிக அளவில் மீன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் தற்பொழுது எங்களது விசைப்படகுகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.