மீன்கள் விலை உயராததால் மீனவர்கள் ஏமாற்றம்

விசைப்படகுகளுக்கான தடைக்காலம் நடந்துவரும் நிலையிலும் நாட்டு படகு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களின் விலை உயராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2023-04-23 18:45 GMT

ராமேசுவரம், 

விசைப்படகுகளுக்கான தடைக்காலம் நடந்துவரும் நிலையிலும் நாட்டு படகு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களின் விலை உயராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தடைக்காலம்

தமிழகம் முழுவதும் தற்போது மீன்கள் இனப்பெருக்க கால சீசன் நடைபெற்று வருகின்றது. அதை தொடர்ந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலும் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 61 நாட்கள் மீன்பிடி தடைக்கால சீசனை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, மூக்கையூர், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விசை படகுகளுக்கு தடைக்காலம் நடந்து வந்தாலும் நாட்டு படகு, பைபர் படகு, சிறிய வகை உள்ளிட்ட படகுகளில் மீன் பிடிக்க செல்ல எந்த தடையும் இல்லை. இதனால் நாட்டுப் படகு, பைபர் படகு சிறிய படகுகளில் வழக்கம் போல் மீனவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

மீனவர்கள் ஏமாற்றம்

விசைப்படகுகள் தற்போது தடைக்காலத்தினால் மீன்பிடிக்க செல்லாததால் நாட்டுப் படகு, பைபர் படகுகளில் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய அனைத்து வகை மீன்களும் சற்று விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலை உயராததால் மீனவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது குறித்து பாம்பன் நாட்டுப் படகு மீனவர் ஒருவர் கூறும்போது, வழக்கமாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத இந்த தடை சீசனில் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுமூலம் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய அனைத்து வகை மீன்களும் விலை உயரும். ஆனால் இந்த ஆண்டு தடை காலம் சீசன் தொடங்கி 1 வாரத்தை கடந்தும் இதுவரை மீன்களின் விலை உயரவில்லை. மீன்கள் வரத்தும் மிகவும் குறைவாகவே உள்ளது. அதுபோல் கேரளாவில் தற்போது தடைகால சீசன் இன்னும் தொடங்கவில்லை. அடுத்த மாதம் தான் தொடங்குகின்றது இன்னும் ஓரிரு வாரங்கள் முடிந்த பின்னரே அனைத்து வகை மீன்களும் சற்று விலை உயர வாய்ப்புகள் இருக்கும்.

மீன்கள் விலை விவரம் 1 கிலோ மாவுலா-350, கலிங்க முரல் -250, வாலை-150, பாறை-250, சூரை-50, மயில் மீன்-120. 

Tags:    

மேலும் செய்திகள்