மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டார். கணவன், மனைவியை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-19 18:45 GMT

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டார். கணவன், மனைவியை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியேறும் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பூம்புகாரை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் வினோத். மீனவர். இவர் தனது மனைவி குணவதியுடன் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய கொடி கம்பத்தின் கீழே அடுப்பு வைத்து சமையல் செய்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் வினோத் கூறுகையில், எனது குடும்பத்தினரை வெளியூரில் தங்கி மீன்பிடித்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர்.

தீக்குளிக்க முயற்சி

மேலும் ஊரில் உள்ளவர்கள் எங்கள் கும்பத்தினருடன் பேசினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாங்கள் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றோம்.அப்போது 2 நாட்களில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் ஒரு வாரம் கடந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்..

பரபரப்பு

போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீனவர் வினோத் தனது மனைவியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து கணவன், மனைவியும் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்