மீன்வளத்துறை அலுவலக வாகனம் ஏலம்; விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள்
மீன்வளத்துறை அலுவலக வாகனம் ஏலம் விடப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பயன்பாட்டில் இருந்த டி.என்.69 ஜி 0186 என்ற பதிவெண் கொண்ட ஜீப் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச வாகன விற்பனை தொகை ரூ.45 ஆயிரம். இந்த வாகனத்தை ஏலம் எடுக்க ஆர்வமுள்ள நபர்கள் வாகனத்தை நேரில் பார்வையிட்டு வாகனம் இருக்குமிடத்தில் உள்ள நிலைக்கு விலைப்புள்ளிகள் அளிக்கலாம். மேலும் விலைப்புள்ளியுடன் ரூ.10 ஆயிரம் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்.234, 2-ம் தளம், கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிற 25-ந்தேதி மதியம் 3 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். இந்த அலுவலகத்தில் பெறப்பட்ட விலைப்புள்ளிகள் மாலை 4 மணிக்கு வருகைபுரியும் ஏலதாரர்கள் முன்னிலையில் திறக்கப்படும். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு 9384824267 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஏல அறிவிப்பு நாள் மற்றும் நேரத்தினை மாற்றி அமைத்திட கலெக்டருக்கு முழு அதிகாரம் உண்டு என மாவட்ட கலெக்டர் ஆனி மேரிஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.