பெரியார் பஸ் நிலையம் அருகில் மீன் சிலைகளை நிறுவலாம்-ஒருங்கிணைப்பு குழு முடிவு
பெரியார் பஸ் நிலையம் அருகில் மீன் சிலைகளை நிறுவலாம் என ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது.
மதுரையை ஆட்சி செய்த பாண்டியர்களின் மீன் சின்னத்தை அடையாளப்படுத்தும் வகையில் மதுரை ரெயில் நிலையத்தில் 3 மீன் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. பராமரிப்பு பணிகளுக்காக அந்த மீன் சிலைகள் அகற்றப்பட்டன. மீண்டும் அந்த சிலைகளை வைக்கக்கோரி வக்கீல் தீரன்திருமுருகன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணையின்போது, ரெயில் நிலைய வளாகத்தில் சிலைகள் வைக்கக்கூடாது என சுற்றறிக்கையை ரெயில்வே அமைச்சகம் அனுப்பியுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் மீன்சிலையை வைப்பதற்காக ஒரு குழுவை ஐகோர்ட்டு அமைத்தது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக மூத்த வக்கீல் ஆர்.காந்தி நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இந்த குழு 3 இடங்களை தேர்வு செய்து இருந்தது. அதன்படி அந்த இடங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் மூத்த வக்கீல் ஆர்.காந்தி தலைமையில் கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜூ, தளபதி, புதூர் பூமிநாதன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். முடிவில் பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள சாலையின் ஓரத்தில் பொதுமக்கள் அனைவரும் பார்க்கும்படியான இடத்தில் மீன் சிலைகளை வைப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது என குழு ஒருங்கிணைப்பாளர் மூத்த வக்கீல் ஆர்.காந்தி தெரிவித்தார்.