வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
மீன்பிடி தடை காலம் காரணமாக வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன.
வேலூர் மீன்மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அன்றைய தினம் அதிகளவு மீன்கள் விற்பனையாகும்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை முதல் அசைவ பிரியர்கள் மீன்மார்க்கெட்டில் குவிந்தனர். தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் வழக்கத்தை விட மீன்கள் குறைவாக மார்க்கெட்டிற்கு வந்தன. அதனால் கடந்த வாரத்தைவிட விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.
ஒரு கிலோ வஞ்சிரம் பெரிய மீன் ரூ.1,400 முதல் ரூ.1,600-க்கும், இறால் ரூ.350 முதல் ரூ.450-க்கும், விறால் ரூ.500 முதல் ரூ.600-க்கும், சங்கரா மீன் ரூ.400-க்கும், நண்டு ரூ.350 முதல் ரூ.400-க்கும், அயிலை, கட்லா மீன்கள் ரூ.160 முதல் ரூ.180-க்கும் விற்பனையானது. நெய்மீன், ஜிலேபி ரூ.120-க்கும், மத்தி, கட்லா ரூ.120 முதல் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
மீன்பிடி தடைக்காலம் முடியும்வரை மீன்களின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்று மீன்வியாபாரிகள் தெரிவித்தனர்.