வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
மீன்பிடி தலைக்காலம் காரணமாக வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை முதல் அசைவ பிரியர்கள் மீன்மார்க்கெட்டில் குவிந்தனர். மீன்பிடி தடைக்காலம் என்பதால் வழக்கத்தை விட மீன்கள் குறைவாக மார்க்கெட்டிற்கு வந்தன. அதனால் விலை சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது.
ஒருகிலோ வஞ்சிரம் பெரிய மீன் ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கும், நடுத்தர வஞ்சிரம் ரூ.750 முதல் ரூ.900-க்கும், இறால் ரூ.350 முதல் ரூ.850-க்கும், கடல் வவ்வால் ரூ.800-க்கும், கட்லா மீன்கள் ரூ.140-க்கும் விற்பனையானது. சங்கரா மீன் ரூ.300 முதல் ரூ.550-க்கும், நெத்திலி ரூ.280-க்கும், நெய்மீன், மத்தி ரூ.120-க்கும், ஜிலேபி ரூ.100 முதல் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டன. அதைத்தவிர மற்ற மீன்களின் விலையும் கடந்தவாரத்தை விட சிறிதளவு அதிகரித்து காணப்பட்டன. மீன்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் மீன்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று மீன்வியாபாரிகள் தெரிவித்தனர்.