வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
வரத்து குறைவால் வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன. இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
வேலூர் மீன்மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவபிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அதனால் அதிகளவு மீன்கள் விற்பனையாகும். கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் விலை சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது.
ஒருகிலோ வஞ்சிரம் பெரிய மீன் ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கும், இறால் ரூ.350 முதல் ரூ.850-க்கும், வெள்ளை வவ்வால் ரூ.1,400 முதல் ரூ.1,500-க்கும், அயிலை, கட்லா மீன்கள் ரூ.140-க்கும் விற்பனையானது. சங்கரா மீன் ரூ.350 முதல் ரூ.400-க்கும், நெத்திலி ரூ.280-க்கும், நண்டு ரூ.250 முதல் ரூ.300-க்கும் நெய்மீன் ரூ.100 முதல் ரூ.120-க்கும், ஜிலேபி ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.