மீன் மார்க்கெட் இடித்து தரைமட்டம்
தஞ்சை கீழவாசலில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
தஞ்சை கீழவாசலில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மீன் மார்க்கெட்
தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் முன்பு மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இடப்பற்றாக்குறை, துர்நாற்றம், சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களுக்காக இடமாற்றம் செய்ய முடிவு செய்து ராவுத்தாபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2001-ம் ஆண்டு புதிய மீன்மார்க்கெட் கட்டப்பட்டது.ஆனால் முறையான சாலை வசதி இல்லாததால் மக்கள் வரமாட்டார்கள். வியாபாரம் இருக்காது என கூறி மீன் வியாபாரிகள் இடம் மாற மறுத்ததால் 7 ஆண்டுகளாக மார்க்கெட் பூட்டியே கிடந்தது. எல்லா வசதிகளையும் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் கடந்த 2008-ம் ஆண்டு வியாபாரிகள் புதிய மீன்மார்க்கெட்டுக்கு இடம் மாறினர்.
56 சில்லறை விற்பனை கடைகள்
இந்த மீன்மார்க்கெட்டில் 56 சில்லறை விற்பனை கடைகள் இருந்தன. மேலும் 15 மொத்த வியாபாரிகளும், 3 முதன்மை ஏற்றுமதியாளர்களும், 100-க்கும் மேற்பட்ட மீன்வெட்டும் தொழிலாளர்களும் இருந்தனர். அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை மார்க்கெட் செயல்பட்டு வந்தது. காவிரி டெல்டாவின் முக்கிய மீன் மார்க்கெட்டாக தஞ்சை கீழவாசல் மீன்மார்க்கெட் திகழ்ந்து வந்தது.இந்த மீன் மார்க்கெட்டுக்கு நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை மற்றும் ஆந்திரம், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடல் மற்றும் உள்நாட்டு மீன் வகைகள் கொண்டு வரப்பட்டன. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பப்பட்டன.
பயனற்ற கழிவறை
மீன் மார்க்கெட்டுக்கு வருவதற்கு கிழக்கில் ராவுத்தாபாளையம் சாலை, வடக்கில் பழைய மாரியம்மன்கோவில் சாலை, மேற்கில் உள்ள பிரபல பாத்திரக்கடைக்கு எதிரே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய பாதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு மேற்கு பகுதியில் உள்ள சாலை அமைக்கப்பட்டு கழிவறை கட்டப்பட்டதால் 2 பாதைகள் மட்டுமே இருந்தன. அந்த கழிவறையும் பயனற்ற நிலையில் உள்ளது.மீன்மார்க்கெட் கட்டிடங்களும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் கட்டிடங்களில் மரம், செடிகள் வளர்ந்து காணப்பட்டன. மேற்கூரையும் ஆங்காங்கே உடைந்து காணப்பட்டன. சுகாதார சீர்கேடான நிலையில் இருந்ததால் மூக்கை பிடித்து கொண்டு தான் மக்கள் உள்ளே சென்று வர வேண்டிய நிலை இருந்தது.
இடிக்கப்பட்டன
புதிதாக மீன்மார்க்கெட் கட்டப்பட்ட பிறகு ஒரு முறை கூட பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என பல முறை வியாபாரிகள் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக கொண்டிராஜபாளையம் பகுதியில் அகழிக்கரையில் தற்காலிகமாக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இதனால் மீன்மார்க்கெட் பூட்டியே கிடந்தது. மேலும் குளிர்சாதன வசதியுடன் நவீன மீன்மார்க்கெட் அமைப்பதுடன் 4 மண்டலங்களில் 4 மீன்மார்க்கெட் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதனால் மீன்மார்க்கெட் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பொக்லின் எந்திரம் உள்ளிட்ட நவீன எந்திரம் மூலம் மீன்மார்க்கெட் கட்டிடம் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. மீன்மார்க்கெட் முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.