மீன்கள் வரத்து குறைவு; மீனவர்கள் கவலை

சீேதாஷ்ண நிலை மாற்றத்தால் மீன்கள் வரத்து குறைந்தன. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

Update: 2022-08-26 17:19 GMT

ராமேசுவரம், 

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மீன்கள் வரத்து குறைந்தன. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

மீனவர்கள் ஏமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதுபோல் ராமேசுவரம் மற்றும் பாம்பனில் அதிகமானோர் மீன்பிடித்தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தென்கடல் பகுதியான மன்னர் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்று வரும் மீனவர்களுக்கு கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதே போல் நேற்று முன்தினம் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை கரை திரும்பினார்கள். இதில் மீனவர்களின் ஒவ்வொரு படகிலும் கணவாய், டியூப் கணவாய், சாவாலை, கிளாத்தி உள்ளிட்ட பலவகை மீன்கள் சிக்கியிருந்தன. வரத்து குறைவால் குறைந்த மீன்களே கிடைத்ததால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

நஷ்டம்

இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு படகுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து மீன் பிடிக்க செல்கிறோம். மீன்கள் வரத்தோ மிக குறைவாகவே இருப்பதால் மீன்பிடித்தொழிலில் கடந்த சில நாட்களாகவே நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரு படகுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இயற்கையாகவே சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கடலில் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையிலும் குறைவான மீன்களே கிடைக்கின்றன. ஆனால் சந்தையில் விலை போகாததால் படகுக்கு செலவழித்த பணம் கூட கிடைப்பதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்