அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ேசர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-09-01 18:45 GMT

வரவேற்பு

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று 2023-24 கல்வியாண்டில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கரூர் மருத்துவக்கல்லூரியானது திறந்து 5 ஆண்டுகள் தான் ஆகி உள்ளது. தற்போது மிகச்சிறந்த கல்லூரியாக திகழ்ந்து வருகிறது.

இதற்கு காரணம் இங்கே உள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் சிறந்து திகழ்வது தான். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நீங்கள் சுதந்திரமாகவும் பணிவுடனும் மருத்துவ படிப்பிற்கான அறிவை தேட வேண்டும். நோயாளிகளுக்கு பணிவுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சேவை மனப்பான்மை

அதேபோல் மருத்துவத்தில் மனிதாபிமானம் கண்டிப்பாக இருக்க வேண்டும். டாக்டர் என்றாலே சேவை பணி தான். நீங்களும் மருத்துவ படிப்பை நல்ல முறையில் முடித்து சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். மருத்துவத்துறையில் சேர்ந்த முதல் நாளே மருத்துவ தொடர்பான அறிவு தேடல் உங்களிடம் இருக்க வேண்டும்.

கல்லூரியில் படிக்கும் பொழுதே அறிவியல் தொடர்பான ஆராய்ச்சி செய்வதிலும் முன்வர வேண்டும். மருத்துவ படிப்பை இறுதி மூச்சு வரை மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் படிக்க வேண்டும். மருத்துவத் துறையில் எல்லாவிதமான குணப்படுத்தும் மருந்து வகைகளை கண்டுபிடித்து வெளியே கொண்டு வருவதற்கு முன்வர வேண்டும். நீங்கள் பயிலக்கூடிய மருத்துவப் படிப்பை உறுதியுடன் படிக்க வேண்டும்.

திறன்களை மேம்படுத்த வேண்டும்

இந்தாண்டு மருத்துவ படிப்பிற்காக சேலம், ஈரோடு, நாமக்கல், அதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து 111 மாணவ, மாணவிகள் சேர்ந்து உள்ளீர்கள். பணிவில் தாழ்வாகவும் படிப்பில் உயர்வாகவும் இருக்க வேண்டும். மொழிகளில் வேறுபாடு இருந்தாலும் மருத்துவ மொழி என்று புரிந்து படிக்க வேண்டும். மருத்துவ கல்லூரி படிப்பை சந்தோஷமான பயணமாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மருத்துவ படிப்பில் அறிவு தேடல் கண்டிப்பாக இருக்க வேண்டும். படிக்கும்போதே உங்களுடைய திறன்களை மேம்படுத்தி பல்வேறு வகையில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மருத்துவம் படிக்கின்ற நீங்கள் தலைசிறந்த மருத்துவராகவும், மிகச்சிறந்த மனிதர்களாகவும் உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூ கொடுத்து...

பின்னர் முதலாமாண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களை சீனியர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகளை எடுத்து கூறினர். இதில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமாமணி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சந்தோஷ் குமார், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் நளினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்